மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் அமைந்துள்ளது ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் பங்குனித் திருவிழாவும், வைகாசி விசாகமும் கரோனா காரணமாக ஆகம விதிகளின்படி கோயிலுக்குள்ளே நடந்துமுடிந்தது.
அதுமட்டுமின்றி, மத்திய அரசு கோயில் நடை திறப்பிற்கு அனுமதி அளித்தும் தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக மாநில அரசு வழிபாட்டுத் தலங்களுக்கு விலக்கு அளிக்கவில்லை. மேலும், இன்னும் கோயில்களில் பொதுமக்கள் வழிபட தடை நீடிக்கின்றது.
இந்நிலையில் நாளை (ஜூன் 21) காலை 10.22 மணிமுதல் மதியம் 01.42 மணிவரை சூரிய கிரகணம் ஏற்படுவதால், காலை 7 மணிக்குள் அனைத்து பூஜைகளையும் முடித்து திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நடைசாற்றப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து சூரிய கிரகணம் நிறைவுபெற்ற பின்னர் பிற்பகல் 1.45 மணிக்கு நடைதிறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை நடைபெறும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் கண்காணிப்பாளர் சாந்தி வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் பூஜைகள் மட்டும் கோயிலில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...கரோனாவால் கைதிகளின் கைவினைப்பொருள்கள் தயாரிக்கும் பணி நிறுத்தம்!