தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் மக்களை ஈர்ப்பதற்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். ஒவ்வொரு வேட்பாளரும் புதுப்புது தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்குவது மட்டுமின்றி, மக்களோடு இணைந்து நாற்றுநடுவது, மாவாட்டுவது, தோசை சுடுவது, துணி துவைப்பது எனப் பல்வேறு வியக்கவைக்கும் செயல்களை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்த வரிசையில், மதுரை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் துலாம் சரவணன், ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார். யாரும் துளியும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத 35 தேர்தல் வாக்குறுதிகளை வள்ளல்போல் அள்ளி வீசியுள்ளார். அதப் படிச்சா நீங்களும் நிச்சயமா ஆச்சரியப்படுவீர்கள்...
- நிலாவுக்குச் சுற்றுலா
- தொகுதி மக்கள் அனைவருக்கும் நீச்சல் குளம் வசதியுடன் மூன்று மாடி வீடு
- அனைத்து வீட்டுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கார்.
- அனைவருக்கும் ஐபோன்
- வீட்டுக்கு வீடு படகு
- தொகுதி சில்லென்று இருக்க 300 அடி உயரத்தில் செயற்கைப் பனிமலை
- ஒவ்வொரு வீட்டுக்கும் சிறிய வகை ஹெலிகாப்டர்.
- வீடு ஒன்றுக்கு வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்
- இல்லத்தரசிகளுக்கு உதவ ரோபோ
- பெண்களின் திருமணத்துக்கு 100 சவரன் தங்க நகைகள்
இது குறித்து துலாம் சரவணன் கூறுகையில், "மதுரை தெற்குத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் எனக்குத் தேர்தல் ஆணையம் குப்பைத் தொட்டியைச் சின்னமாக ஒதுக்கியுள்ளது. நான் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் பார்த்து பொதுமக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம்தான். எனது கைக்கு அதிகாரம் வந்தால் இவை அனைத்தையும் நிறைவேற்றுவேன்" எனச் சிரிக்காமல் உறுதியுடன் தெரிவிக்கிறார்.
தேர்தல் வாக்குறுதியில் எதை வேண்டுமானாலும் அள்ளிவிடலாமுனு, இப்படி எல்லாமா சொல்லுவீங்க என சமூக வலைதளங்களில் இணையவாசிகள் கலாய்த்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'நிலாவில் நிலம்... வானில் நட்சத்திரம்' நிஜத்திற்கு அப்பாற்பட்டதை பரிசாக வழங்கிய காதலன்!