மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் மாவட்டங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டுவரும் வைராலஜி ஆய்வகம் இதுவரை ஐந்து லட்சம் கரோனா பரிசோதனைகளை செய்து சாதனை படைத்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி வைராலஜி ஆய்வகங்களில் இதுவே அதிகம்.
இது குறித்து மருத்துவமனை முதல்வர் சங்கு மணி கூறுகையில், "இந்த சாதனைக்கு முக்கிய காரணம் அர்ப்பணிப்புடன் கூடிய நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், ஆராய்ச்சி விஞ்ஞானிகள், முதுகலை மாணாக்கர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு. இவர்கள் மார்ச் 25ஆம் தேதி முதல் தற்போது வரை 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஆய்வகத்தில் மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு நான்காயிரத்து 800க்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதிக்கும் திறன் கொண்டு விளங்குகின்றது.
மாநிலத்திலேயே முதன் முறையாக கரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமும், இணைய தளம் மூலமும் உடனுக்குடன் மக்களுக்கு வழங்கி அனைவரின் பாரட்டுதல்களையும் பெற்றதும் இந்த ஆய்வகம் தான்" என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கு காலத்தில் சுமார் 10 ஆயிரம் பிரசவங்கள் - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை