மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மதுரை ரயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரை 80.67 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு இதே காலத்தில் பயணிகள் வருமானம் 280.80 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு 78 சதவீதம் அதிகரித்து 502.05 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு 191.44 கோடி ரூபாயாக இருந்த சரக்கு போக்குவரத்து வருமானம், 27 சதவீதம் அதிகரித்து 2022ஆம் ஆண்டில் 242.60 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மதுரை கோட்டத்தில் ரயில்களில் 2021ஆம் ஆண்டில் 9.2 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளனர். 2022-ல் பயணிகள் எண்ணிக்கை 24.1 மில்லியனாக உயர்ந்துள்ளது.
2021-ல் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடமிருந்து 654.41 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தது, பயணிகள் ரயில்களில் வர்த்தக பயன்பாட்டு சரக்குகள் கொண்டு சென்றது, ரயிலில் புகை பிடித்தது, ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்தியது உள்ளிட்டவற்றிற்கு பயணிகளிடம் இருந்து அபராதமாக 834.12 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
2022-ல் பயணிகள் ரயில்களில் 21,358 டன் சரக்குகளும், சரக்கு ரயில்களில் 2.20 மில்லியன் டன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்து, இஸ்லாமிய மாணவிகள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்