மதுரை: இந்தியாவில் பல்வேறு ரயில் நிலையங்கள் பெருகிவரும் தேவைக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் மறு சீரமைப்பு செயப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், காட்பாடி, கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய ஐந்து ரயில் நிலையங்கள் நவீன வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட இருக்கின்றன. இந்த ரயில் நிலையங்களில் புதிய ரயில் நிலையம் கட்டிடங்கள் கட்டப்பட இருக்கின்றன.
இதற்காக ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். மதுரை ரயில் நிலையம் ரூ.347 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட இருக்கிறது. மதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பகுதிக்கு மேல் பயணிகள் காத்திருக்கும் அறை அமைய இருக்கிறது.
அங்கிருந்து நேரடியாக அனைத்து நடை மேடைகளுக்கும் செல்லலாம். மதுரை ரயில் நிலையம் மறு சீரமைப்பு பணிகளுக்காக ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை ஆரம்பித்து நாளிலிருந்து 36 மாதங்களில் பணி நிறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரம் ரயில் நிலையம் ரூ.90 கோடி செலவில் மறு சீரமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஒப்பந்ததாரரும் தேர்வு செய்யப்பட்டு வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணிகள் துவங்கிய நாளிலிருந்து 18 மாதங்களில் புதிய ரயில் நிலையக் கட்டிடம் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருநெல்வேலி மற்றும் கும்பகோணம் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான திட்ட மதிப்பீடு, திட்ட சாத்திய அறிக்கை ஆகியவற்றை தெற்கு ரயில்வே நிர்வாகம் தயாரித்து வருகிறது.
இதையும் படிங்க:சென்னையில் திடீர் கனமழை - 13 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதம்