தென்னகரயில்வேயின் கீழ் உள்ள, தென் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த ரயில் சந்திப்புகளில் ஒன்றான மதுரை ரயில்வே சந்திப்பு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.
பயணிகள் ரயில், சரக்கு ரயில் என நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் மதுரை சந்திப்பிலிருந்தும், மதுரையைக் கடந்தும் செல்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
தற்போதைய கரோனா ஊரடங்கின்போதும்கூட சரக்குகள் அனுப்புவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, மதுரை ரயில்வே நிலையம். இந்த ரயில்வே நிலையத்தின் முகப்புத் தோற்றம் சமீபத்தில் பயணிகளைக் கவரும் வகையில், பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டு, மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பயணிகள் காத்திருப்பு அறைகள், குளிர் சாதன வசதி கொண்ட அறைகள், நூல் விற்பனை மையங்கள், உணவகங்கள், பார்சல் அலுவலகங்கள் உள்ளிட்டவைகளும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு தென்னக ரயில்வேயின் முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் விளங்கி வருகிறது.
பயணிகள் சேவைக்குரிய அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், மதுரை ரயில்வே சந்திப்புக்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக, மதுரை ரயில்வே கோட்ட அலுவலர்கள் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : ராமாயண யாத்திரை ரயில் மதுரையிலிருந்து இயக்கம்