மதுரை : மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் வேலை விண்ணப்ப படிவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
சாதி- உட்பிரிவு விவகாரம்
சம்பந்தப்பட்ட விண்ணப்ப படிவத்தில் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் பெயர், கல்வித் தகுதி, பிறந்த தேதியுடன், சாதி மற்றும் உட்பிரிவும் கேட்கப்பட்டுள்ளது.
ஏனெனில் சாதி மற்றும் உட்பிரிவு கேட்கும்போது பட்டியலினப் பிரிவில் உள்ள ஒரு சில உட்பிரிவு சாதிகள் கடுமையாக பாதிக்கப்படக் கூடும். இதுவே விவகாரம் பூதாகரமாக காரணம்.
சமூக செயற்பாட்டாளர்கள் அதிர்ச்சி
மேலும், இந்தச் சமூகம் பட்டியலினத்தில் உள்ள சில சமூகங்களுக்கென்று சில பணிகளை ஒதுக்கிவைத்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்று பலரும் சாதி, மதம் கடந்து வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனை பணிக்கு சாதி, உட்பிரிவு கேட்கும் விவகாரம் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விளக்கம்
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை அலுவலர் ஒருவரை தொடர்புகொண்ட போது, “சாதி, உட்பிரிவு தொடர்பான விவகாரத்தில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. அரசுக்கு கொடுக்க வேண்டிய விவரங்களின் அடிப்படையில் மதம், சாதி தொடர்பாக கேள்விகள் அமைந்துள்ளன.
இடஒதுக்கீடும் கடைப்பிடிக்க வேண்டும். மற்றப்படி வேறு எண்ணங்கள் இல்லை. இந்த விண்ணப்பங்கள் எவ்வாறு வெளியாகின என்பது தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை பாயுமா?
எது எப்படியோ கடந்த கால தவறுகள் வருங்காலங்களிலும் தொடரக் கூடாது, “சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்ற அண்ணலின் வார்த்தைகளை நினைவுக் கூறும் சமூக செயற்பாட்டாளர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது அரசு எடுக்கப்போகும் சட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாகவும் வினாயெழுப்புகின்றனர்.
அரசு, பொதுவாக இது போன்ற சாதி விபரங்களை கேட்கும் போது இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்பிசி), பட்டியலினத்தவர்கள் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) என்று மட்டுமே தகவல் இடம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை - கனிமொழி எம்பி