மதுரை: திமுக சார்பாக சென்னையில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, சனாதன கருத்தியலை ஒழிக்க வேண்டும் எனவும் டெங்கு, மலேரியா போன்று சனாதனமும் ஒரு கிருமி எனப் பேசினார்.
இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும், மத அமைப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்யாவை சேர்ந்த சாமியார் சீர் ராமச்சந்திர தாஸ் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் கையில் வாளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவிக் கொண்டு வருபவருக்கு ரூ.10 கோடி பரிசு அளிப்பதாகவும், அவ்வாறு யாரும் கொண்டு வராத பட்சத்தில் அவரே உதயநிதியின் தலையை சீவி விடுவதாகவும், உதயநிதியின் புகைப்படத்தை வாளால் குத்தி எரித்தும் மிரட்டல் விடுத்து இருந்தார்.
மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு, அந்த வீடியோ பதிவை Piyush Rai@benarasiyaa என்பவர் மூலம் சமூக வலைதளத்தில் பரப்பியிருந்தார். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த மதுரை மாநகர வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் தேவசேனன் என்பவர் உததரபிரேத சாமியார் வெளியிட்ட வீடியோ தமிழ் நாட்டு மக்கள் மத்தியில், பீதியையும், அச்சத்தையும் மற்றும் மத இன கலவரத்தை தூண்டும் வகையிலும், மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாகவும் மேற்படி நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் புகார் அளித்தார்.
தற்போது இந்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சீர் ராமச்சந்திர தாஸ் பரம்ஹன்ஸ் ஆச்சார்யா மற்றும் Piyush Rai@benarasiyaa ஆகியோர் மீது, 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.