இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை நாள்தோறும் பயன்படுத்திவருகின்றனர். இந்த சமூக வலைதளங்கள் மூலம் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் குறித்த விழிப்புணர்வை மதுரை மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுத்திவருகின்றனர்.
போக்குவரத்து விதிமுறைகள் மீறல்கள், தலைக்கவசம் அணிவதனின் அவசியம், பாதுகாப்பான பயணம், பொது இடங்கள், கூட்டநெரிசல்மிக்க இடங்களில் பொதுமக்கள் தங்களது நகைகள், பணம் போன்ற தங்களது உடமைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, வீட்டில், தொழில் நிறுவனங்களில் கண்காணிப்புக் கேமராக்கள், பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
இதுபோன்ற விழிப்புணர்வுகள் பொதுமக்களிடமும், இளைஞர்களிடமும் விரைவாகவும் எளிதாகவும் சென்றடைவதற்காகப் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய வாஸ்ட்அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு மீம்ஸ் காணொலிகளை மதுரை மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் காணொலிகள் தற்போது மதுரை மாவட்டம் அல்லாத அனைத்து மாவட்டங்களுக்கும் வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்களால் பகிரப்பட்டுவருகின்றது.
மேலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்ட மதுரை மாவட்ட காவல் துறையினர், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளுக்காக தனி அலுவலர் குழுவை நியமித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மது தீமைக் குறித்த ஆடல், பாடல்... போலீஸ் விழிப்புணர்வு