மாற்றுப் பாலினமாக அறிவிக்கப்பட்டுள்ள திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆகியோருக்கு இதுவரை சட்டரீதியான பாதுகாப்புத் தரக்கூடிய ஆணையம் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அரசிதழிலும் அறிவிப்பு வெளியானது. இந்த ஆணையம் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சரைத் தலைவராகவும், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த செயலாளர்களை உறுப்பினராகவும் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் நிர்வாக வசதியைக் கருத்திற் கொண்டு, இந்திய நாடு வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு என ஐந்து பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு, அப்பிராந்தியங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் பிரதிநிதியாகச் செயல்பட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா, லட்சத்தீவு ஆகியவற்றை உள்ளடக்கிய தெற்கு பிராந்தியத்திற்கு மதுரையைச் சேர்ந்த கோபி சங்கர் என்பவர் பிரதிநிதியாக மாற்றுப் பாலினத்தவர் ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் மூன்றாண்டுகள் இதன் பொறுப்பில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது .
இதுகுறித்து கோபிசங்கர் கூறுகையில், "இந்தியா முழுவதும் மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மிகக் கொடுமையானது. பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் இவர்கள் குறித்து வெளி உலகம் தெரிந்து கொள்ளாமலே போய்விடும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும் கிடைப்பதில்லை.
கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் என எதுவுமே மாற்றுப் பாலினத்தவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காக எழுந்த குரல் தான் மாற்றுப் பாலினத்தவர்களுக்கான ஆணையம் வேண்டும் என்பது.
அதன் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மத்தியில் இயங்கி வரும் தேசிய மகளிர் ஆணையம், மனித உரிமை ஆணையம் போன்ற அரசின் 12 துறைகளோடு இணைந்து, இனி மாற்றுப் பாலினத்தவர் ஆணையமும் செயல்படும். அவர்களின் உரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களில் ஆணையம் கவனம் செலுத்துவதுடன், மாற்றுப் பாலினத்தவர் மீதான தாக்குதல்களும், வன்கொடுமைகளையும் இனி இந்த ஆணையம் விசாரிக்கும்" என்று கூறியுள்ளார்.