மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 'ஸ்வச் ஸர்வேக்ஷான்' என்ற திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள தூய்மையான நகரங்களுக்கு மதிப்பெண் வழங்கி பட்டியல் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஏறக்குறைய 4 ஆயிரத்து 242 நகரங்கள் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.
அதுமட்டுமன்றி நாடு முழுவதும் ஏறக்குறைய 1.9 கோடி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதுடன், அந்தந்த மாவட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டன. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள், 24 லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்பட ஆதாரங்கள் டிஜிட்டல் வாயிலாக திரட்டப்பட்டது. உலக அளவில் சுகாதாரம் தொடர்பாக நடத்தப்பட்ட மிகப்பெரிய கணக்கெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.
10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகராக மத்தியப்பிரதேசத்தின் இந்தூர் 5647.56 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோயமுத்தூர் 40ஆவது இடத்தையும், மதுரை 42ஆவது இடத்தையும், சென்னை 45ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
மதுரையை பொறுத்தவரை 2011ஆம் ஆண்டு 57ஆவது இடமும், 2018ஆம் ஆண்டு 123ஆவது இடமும், 2019ஆம் ஆண்டு 201ஆவது இடமும் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டிற்கான கணக்கெடுப்பில் 42ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது முக்கிய நகரமாக திகழும் மதுரை மாநகர் 101 வார்டுகளை கொண்டது. இதன் மொத்த மக்கள்தொகை 10 லட்சத்து 17 ஆயிரத்து 865.
தூய்மை நகரங்கள் குறித்த கருத்துக் கணிப்பில் 85 ஆயிரத்து 687 பேர் கலந்து கொண்டனர். அதில் நாற்பத்தி இரண்டாவது இடம் பெற்ற மதுரை 2255.81 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
தேசிய அளவில் நாற்பத்தி இரண்டாவது இடம் பெற்று தூய்மை நகரங்களின் பட்டியலில் முதல் 60 இடங்களுக்குள் மதுரை இடம்பெற்றிருந்தாலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் இதுகுறித்து குறித்து வரவேற்பும் எதிர்ப்பும் இருக்கிறது.
மதுரையை ஏதென்ஸ் நகரத்துடன் ஒப்பிடுவார்கள். ஆனால் அதைக் காட்டிலும் பழமையானது என்பதை கீழடி அகழாய்வு இன்று உறுதி செய்து கொண்டிருக்கிறது. அவ்வளவு பாரம்பரியம் உள்ள மதுரையின் அடையாளமாக திகழும் வைகை ஆற்றில் கலக்கும் கழிவு நீரை தடுக்க மாநகராட்சி சார்பாக இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. மக்கள் குடிக்கின்ற குடிநீரில் கூட கழிவுநீர் கலப்பதாக பல இடங்களில் குற்றச்சாட்டுகள் உள்ளது.
ஒருபுறம் நகரில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் வரவேற்பைப் பெற்றாலும், அதற்காக இழந்த மரங்கள் நீர்நிலைகள் மிக அதிகம். இதன் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் கேடுகள் அதை விடவும் அதிகம் எனவும் குறைபட்டுக் கொள்கின்றனர்.
மதுரை மாநகராட்சி நடத்திய சர்வேயில் நானும் பங்கேற்று எனது கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். மதுரையை பொறுத்தவரை அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் நாம் இன்னும் மேம்படவில்லை. மதுரையின் அடையாளமாக திகழக்கூடிய வைகை ஆற்றில் இப்போதும்கூட கழிவுநீர் கலந்து கொண்டே இருக்கிறது என மதுரை ஜெய்ஹிந்த்புரம் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் கூறுகிறார்.
மதுரையின் மையப்பகுதியில் ஏற்கக்கூடிய மாசி வீதிகளில் நடுரோட்டில் சாக்கடை தண்ணீர் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. கலாச்சார பெருமையும் பழமையும் மிக்க மதுரையை இன்னும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பு வசதிகள் இருந்தும் கூட அது செயல்படுத்தபடாமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உடம்பில் ஆயிரக்கணக்கான நோய்நொடி ஓடு இருக்கின்ற ஒருவரை ஒப்பனை செய்து அழகு படுத்துவதற்கு ஒப்பானது இந்த புள்ளிவிவர அறிவிப்பு என குறைப்பட்டுக் கொள்கின்றனர் மதுரைவாசிகள்.
கடந்த சில ஆண்டுகளாக மதுரை நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் பாலங்கள் கட்டுதல், மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி சாலையை சீரமைத்து அழகுபடுத்துதல், பெரியார் பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் என பலவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இவையெல்லாம் நடந்தாலும் மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் வடிகால் வசதியும், சாலைவசதியும் பின்தங்கியே இருக்கிறது.
வைகை ஆற்றுக்குள் தேவையற்ற மின் வயர்களை போட்டு எரிப்பது இப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை மாநகராட்சி தலையிட்டு தடுக்க முன்வரவேண்டும். கரோனா வைரஸ் தொற்று சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஆனால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் தூசியால் நிறைந்துள்ளது. அவற்றால் ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு இதுவரை காணப்படவில்லை என காற்று மாசு மற்றும் சுவாசப் பிரச்னைகள் பற்றி வேதனையுடன் தெரிவிக்கிறார் வைகை நதி மக்கள் இயக்கத்தின் மதுரை மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல்ராஜன்.
தூய்மை நகரங்களுக்கான பட்டியலில் மதுரை தேசிய அளவில் முன்னணியில் இருந்தாலும் கூட இன்னும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இதற்கு மதுரை மாநகராட்சி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசு ஆகியவை இணைந்து அக்கறையோடு செயல்பட முனைந்தால் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற அதிக வாய்ப்பு உண்டு. தற்போது உள்ள குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து அதை நோக்கி மதுரை மாநகர் முதல் இடம் பெற வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமும் கூட...!
இதையும் படிங்க: குட் பை தமுக்கம் மைதானம்!