சிவகங்கையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கணவனை இழந்த நான், ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்துவருகிறேன். எனது இரண்டாவது மகளுக்கு 26 வயதாகிறது. அவளுக்கு மனநலக் குறைபாடு உள்ளது. வீட்டில் நானும் என் இரண்டாவது மகள் மட்டுமே வசித்துவருகிறோம்.
நான் காலையில் ஆடு மேய்க்கச் சென்றால் மாலையில்தான் வீடு திரும்புவேன். ஒரு நாள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் முதியவர் ஒருவர் என் மகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தற்போது அந்த முதியவர் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், பாலியல் வன்புணர்வுக்கு ஆளான எனது 26 வயது மகள் 12 வாரம் கர்ப்பிணியாக உள்ளார். எனவே அவரது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர், பாதிக்கப்பட்ட பெண் ஆகியோர் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் முன் ஆஜராக வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தகுந்த பரிசோதனைகள் மேற்கொண்டு அம்மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க : பொருளாதார வீழ்ச்சிக்கு சிதம்பரம் சொல்லும் மூன்று காரணங்கள்