மதுரை திருமங்கலம் அன்னகாமு தோட்டத்தில் வசித்து வரும் காவேரி அம்மாள் (வயது 55). கணவர் இறந்ததால் குழந்தை இல்லாத காவேரியம்மாள் வீட்டிலேயே சிறிய பெட்டிக் கடை, வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு எட்டு மணிக்கு வீட்டின் எதிரே, வாடகை வீட்டில் குடியிருந்த காதர் பாஷா ஒளி (35) என்பவர் கடையில் பொருட்கள் வாங்குவது போல், மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து, கழுத்தில் இருந்த ஐந்து சவரன் தங்க செயினைப் பறிக்க முயன்றுள்ளார்.
காவேரி அம்மாள் செயினைப் பறிக்க விடாமல், காதர் பாஷாவிடம் சண்டை போட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த காதர் பாஷா கையில் வைத்திருந்த கத்தியை வைத்து, மூதாட்டியின் இடது கையிலும், கழுத்திலும் அறுத்ததால் காவிரியம்மாள் அலறி துடித்துள்ளார்.
இதில், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர, காதர் பாஷா அனைவரையும் கத்தியைக் காட்டி மிரட்டி, காயமடைந்த மூதாட்டியை வீட்டுக்குள் இழுத்துச் சென்று, வீட்டினுள் இருந்த சிலிண்டரை திறந்து விட்டு, தீயைப் பற்ற வைத்து விட்டு, வீட்டுக்குள்ளேயே பதுங்கி விட்டான்.
உடனே, அருகில் இருந்தவர்கள் உடனடியாக திருமங்கலம் தீயணைப்புத் துறைக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தீயை அணைத்து, காயமடைந்த மூதாட்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்குள் பதுங்கியிருந்த காதர் பாஷாவைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த காவிரி அம்மாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து, காதர் பாஷாவை விசாரித்து வருகிறார்கள். காதர் பாஷாவுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவியின் தாயாருக்கு ஜாமின் தள்ளுபடி!