மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பகுதியைச் சேர்ந்த பாரதிதாசன் - செல்வி தம்பதியின் மகள் தென்னரசி. இவர் வாடிப்பட்டியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கரோனாவை எதிர்த்து களத்தில் பணியாற்றும் மருத்துவர், செவிலியர், செய்தியாளர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என யார் உயிரிழந்தாலும் எங்களது சொந்த நிலத்தில் உடலை அடக்கம் செய்துகொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அத்துடன் தங்களது நிலத்தின் பட்டா, சிட்டா நகல்களையும் இணைத்து அனுப்பியுள்ளார்.
மாணவி எழுதியுள்ள கடிதத்தில், ”மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சைகட்டி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் மகள் தென்னரசியாகிய நான், வாடிப்பட்டியில் உள்ள ’தாய் மெட்ரிக்’ பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறேன். உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் நோயிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டி வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா வார்டில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சமூக விரோதிகள் மக்களை தூண்டிவிட்டு அடக்கம் செய்யவிடாமல் தடுத்து வருகிறார்கள். இதனால் அல்லும் பகலும் பாடுபடும் மருத்துவர்கள் மனவேதனையில் உள்ளனர். மேலும் எனது தந்தை சிறு விவசாயி. அவருக்குச் சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் உள்ளது.
கரோனா சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், ஊடகத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் நோய்த் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தால் அவர்களின் உடலை எங்கள் நிலத்தில் அடக்கம் செய்ய என் தந்தை, தாயாரின் ஒப்புதலின் பேரில் சம்மதம் தெரிவித்து பயன்படுத்திக்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இழப்பைச் சந்தித்துள்ள இந்திய விமான சேவை நிறுவனங்கள்