தமிழ்நாட்டில் அதிவேகமாகப் பரவிவரும் கரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நேற்றுமுதல் (ஏப். 20) இரவு நேர ஊரடங்கு அமலானது. அதனடிப்படையில், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அரசு, தனியார் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
வெளிமாநிலம், வெளி மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்தும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. அவசர மருத்துவச் சேவைக்காக விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோவில் செல்ல தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் சேமிப்பு நிலையம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு நேர ஊரடங்கு காரணமாக ஆள்கள் யாருமின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தூங்கா நகரமான மதுரையில் பரவை காய்கறிச் சந்தை, மாட்டுத்தாவணி பழச்சந்தை, பூச்சந்தை உள்ளிட்டவை இரவு நேரங்களில் செயல்படுவது வழக்கம்.
இரவு நேர ஊரடங்கு காரணமாக இவை அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்துச் சாலைகளும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆங்காங்கே வாகனச் சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.
இது குறித்து மாநகர காவல் உதவி ஆணையர் சூரக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதால் மதுரை மாநகரில் பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது.
முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து காவல் துறையினர் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்திவருவதால், தற்போது மதுரை மாநகரில் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேபோல், முகக்கவசம் அணிந்தும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள், வர்த்தகர்கள், வாகன ஓட்டிகள் உள்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்படி ஊரடங்கு அமலில் உள்ள நேரங்களில் ஆம்புலன்ஸ், பால் விநியோகம், ஊடகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: இரவு நேர ஊரடங்கை மீறியவர்களை எச்சரித்து அனுப்பிய காவல் துறை