மதுரை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக மேரி என்பவர் பணிபுரிகிறார். இவர் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்குவதாக மாநகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்த மாநகராட்சி ஆணையர் விசாகன், சுகாதார ஆய்வாளர் முருகனுக்கு உத்தரவிட்டார். அவரும் பெண் ஊழியர் மேரி லஞ்சம் வாங்கியதை உறுதி செய்தார். இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் முருகன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பெண் ஊழியர் மேரி மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தார்.
இப்புகார் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்காததால், டிசம்பர் 4-ஆம் தேதி மதுரை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரை பெண் ஊழியர் மேரி மறித்து புகார் மனு அளித்தார்.
இதனால் சுகாதார ஆய்வாளர் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு சுகாதார ஆய்வாளர் முருகன் தான், பெண் ஊழியர் மேரிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கவில்லை எனவும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பெண் ஊழியர் மேரி சுகாதார ஆய்வாளர் முருகன் மீது பொய் குற்றச்சாட்டு வைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் மாநகராட்சி ஊழியர்கள் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கையும் களவுமாக பிடிப்பட்ட அலுவலர்!