மதுரை மாவட்டம் அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோயில் அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சிவலிங்க சம்ப பிரகாஷ் என்பவர் பிரபல குளிர்பானம், மருந்துப் பொருள்களின் குடோன் நடத்திவருகிறார்.
தற்போது, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக குடோன் பூட்டி வைக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை குடோன் தரைத் தளத்திலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது.
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து சுமார் இரண்டு மணிநேரம் போராடித் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் அங்கு வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அதில், மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இந்தத் தீ விபத்தில் சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்தத் தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் போல் காட்சியளித்தது.
இதையும் படிங்க:திருப்பூர் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து!