மதுரை: தேனீயைப் போன்ற சுறுசுறுப்பு; ஏற்றுக் கொண்ட பணியில் ஈடுபாடு; சிரித்த முகத்துடன் அணுகும் அக்கறை. இதுதான் 'பூம்' ஷர்மிளா. எந்நாளும், எந்நேரமும், தேவைப்படும் யாருக்கும் கேட்ட மாத்திரத்தில் குருதி தானம் வழங்குவதில் வெகு சிரத்தையுடன் செயல்படும் இவர், தன்னுடைய அயராத உழைப்பால் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியபோதிலும், தன்னடக்கத்துடன் இயங்கி வருகின்ற தனியார் பள்ளி ஆசிரியை.
"எங்களது அமைப்பில் 60 ஆயிரம் பேர் இருந்தாலும், உயிர்ப்புடன் செயல்படக்கூடிய கள செயல்பாட்டாளர்கள் 35 ஆயிரம் பேர் உள்ளனர். மதுரை உண்மையான ஸ்மார்ட் சிட்டியாக மாற வேண்டும் என்ற தேடுதலும் வேட்கையும்தான் எங்களை தொடர்ந்து இயங்க வைக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகள் எல்லோருக்கும் ஓய்வுநாளென்றால், எங்களுக்கு அன்றுதான் சமூகத்தை வாழ்விக்கும் நாளாக இருக்கிறது. அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்கள்தான் 'பூம்' அமைப்பின் தூண்கள்'' என்கிறார் ஷர்மிளா.
குருதி தானத்தை முதன்மையாகக் கொண்டு 'பூம்' தன்னார்வ அமைப்பு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும், நேற்று தொடங்கிய அமைப்பு போலத்தான் இயங்குகிறார்கள் இதன் உறுப்பினர்கள். நள்ளிரவு என்றாலும், நெடுந்தொலைவு என்றாலும் குருதிக்கொடை வழங்குவதில் ஒரு போதும் இவ்வமைப்பின் உறுப்பினர்கள் முகம் சுளிப்பதில்லை.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ராமமூர்த்தி பூம் அமைப்பு குறித்து கூறுகையில், 'நான் கடந்த 5 ஆண்டுகளாக மதுரையில் வசித்து வருகிறேன். முகநூல் மூலமாக 'பூம்' அமைப்பு, ஷர்மிளாவின் அறிமுகம் கிடைத்தது. ஒருமுறை ரத்ததானம் வழங்கத் தாமதமானபோது, அதற்காக என்னை மிகவும் கடிந்து கொண்டார். அந்த அளவிற்கு இந்தச் சேவையை கண்ணும் கருத்துமாக அவர் செய்து வருகிறார். அவரது ஈடுபாடுதான் என்னை சமூக சேவைக்கு அழைத்து வந்தது" என்கிறார்.
![boom blood donors organiser](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9934861_boom.jpg)
தற்போது மதுரையிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் குருதித் தேவைக்கான அவசர உதவி மையங்கள் 'பூம்' சார்பாக உருவாக்கப்பட்டு, தேவைப்படும் நபர்களுக்கு அடுத்த சில நிமிடங்களில் குருதிக் கொடை வழங்கும் அளவிற்கு இவர்களின் வலைப்பின்னல் இயங்கி வருகிறது. இந்த தன்னலமற்ற சேவைக்காகவே 2 தேசிய விருதுகள் உள்பட 40க்கும் மேற்பட்ட விருதுகளை இந்த அமைப்பினர் வென்றுள்ளனர்.
மேலும் ஷர்மிளா பேசுகையில், "மதுரை காவல்துறையின் ஆலோசனைக்குழுவில் பூம் சார்பாக நான் உறுப்பினராக உள்ளேன். மதுரை காவல்துறை ஆணையர் ஒத்துழைப்புடன் காவல்துறை, பொதுமக்கள் உறவு மேம்பட பல்வேறு விழிப்புணர்வு பணிகளை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். தற்கொலை நிகழ்வுகளைக் குறைக்கும் விதமாக காவல்துறையால் உருவாக்கப்பட்ட முதன்மை பயிற்சியாளர்களில் பொதுமக்களில் ஒருவராகக் கலந்து கொண்டு சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு சேவையைச் செய்து வருகிறேன்" என்கிறார்.
![boom blood donors organiser](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9934861_boo.jpg)
மதுரை தியாகராசர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ராகுல் கூறுகையில், "நான் கல்லூரி படிக்கும் காலத்தில் ரத்த தானம் செய்ய ஆர்வமாக இருந்தேன். அப்போது ஷர்மிளா அறிமுகமானார். அவர் அளித்த ஊக்கமும், உற்சாகமுமே தற்போது 'பூம்' அமைப்பின் குறிப்பிடத்தக்க நெறியாளராக உயர்ந்ததற்கு காரணமாக உள்ளது" என்கிறார்.
எய்ட்ஸ், புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று குருதிக் கொடையின் அவசியத்தையும் 'பூம்' அமைப்பின் இளைஞர்கள் விளக்கி வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்கி நெறிப்படுத்துகிறார் ஷர்மிளா. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, மாநகர காவல்துறையுடன் இணைந்து சாலையோரம் வாழ்ந்து வந்த ஆதரவற்றோர்களை அழைத்து வந்து தேவையான உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து காப்பாற்றியுள்ளார். தற்போது அவர்களில் 400பேர் தங்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதை பெருந்தொற்றுக் காலத்தில் நிகழ்ந்தவையை ஷர்மிளா நினைவு கூர்கிறார்.
![boom blood donors organiser](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9934861_food.png)
இளைஞர் நாகூர்கனி கூறுகையில், "குருதிக் கொடை மட்டுமன்றி, படிக்க வசதியற்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையான உணவு, உடைகள் வழங்குவது போன்ற சமூக சேவைகளையும் மேற்கொண்டு வருகிறோம். 'பூம்' அமைப்புடன் இணைந்து செயலாற்றுகின்ற காரணத்தால், தற்போது குருதிக் கொடை மூலம் நாள்தோறும் 10லிருந்து 20 நபர்களைக் காப்பாற்ற முடிகிறது என்பதில் எனக்குப் பெருமை" என்கிறார்.
நான்கு பேருக்கு செய்த நன்மை, நான்காயிரமாக மாறி, பிறகு 40 ஆயிரமாய் விரிவடைவது என்பது மகத்தான மாற்றம்தான் என்றாலும், தன்னைப் போலவே நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை உருவாக்கி, சமூக சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களையும் சுணக்கமின்றி செயல்பட வைப்பது அதையும்விட உன்னதமானது. அப்படியொரு வழிகாட்டியாய் நிமிர்ந்து நிற்கிறார் 'பூம்' ஷர்மிளா.
இதையும் படிங்க: அறிவை வளர்க்க அறிவொளிப் பெட்டி - புதுக்கோட்டை மனிதரின் சமூக சேவை