மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலை நிலை கல்வி இயக்ககத்தில் நாடு முழுவதும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. பல ஆண்டுகளாக தொலைதூரக் கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றது.
இந்த புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தொலைதூரக் கல்வி இயக்கக அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது கடந்த 2014-15ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல்வி ஆண்டில் பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்த 253 மாணவர்களின் விண்ணப்பத்தில் எந்தவிதமான சுயகுறிப்புகளையும் தெரிவிக்காமல் தங்களது புகைப்படம் மற்றும் முகவரியை மட்டுமே குறிப்பிட்டு உள்ளனர். பல விண்ணப்பங்களில் மாணவரின் பெற்றோர், தொலைபேசி எண்கள், புகைப்படம், முகவரி உள்ளிட்ட எந்த தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பதாரரின் பெயர் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு படிப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் தேர்வு எழுதியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஒவ்வொரு மாணவருக்கும் முறைகேடாக போலியான சான்றிதழ்களை வழங்க தலா ரூ.1 லட்சம் வரைப் பணம் கைமாறியதாகவும் தெரியவந்துள்ளது.
தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், கணினிப் பிரிவு கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் கார்த்திகைச்செல்வன் ஆகிய மூன்று பேரிடமும் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பல்கலைக்கழகத்தில் கூடிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, கணினி ஆபரேட்டர் கார்த்திகை செல்வன் ஆகியேரை பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து துணை வேந்தர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிக்க: ஏரோநாட்டிக்கல் படிப்புக்கு கல்விக் கடன் கிடையாது... ஆதிதிராவிட நலத்துறை செயலருக்கு நோட்டீஸ்!