மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைத்திருநாளை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தமிழக அரசு சார்பாக நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார்.
இதற்காக அலங்காநல்லூா் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான 66 ஏக்கா் நிலம் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டு, வணிக வரித்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த இடத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து நான்கு மாதங்களுக்குள் விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்றன.
இந்நிலையில் அலங்காநல்லூர் அருகே இருக்கக்கூடிய கீழக்கரை கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் 66 ஏக்கர் பரப்பளவில் 44 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறையின் சார்பாக ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற 24ஆம் தேதி முதல் இந்திய அளவில் இருக்கக்கூடிய முன்னணி நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொள்ளலாம் எனவும்; பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஜல்லிக்கட்டு அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரையின் கலாசார மையமாகவும், ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தும் வகையிலும் இந்த அரங்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.