தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம் பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகிறது. அவ்வாறு நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது எந்தவித அசம்பாவிதமும் உயிரிழப்பும் ஏற்படாத வண்ணம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 10 பேர் கொண்ட செஞ்சிலுவைச் சங்கம் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இவர்களது பணி ஜல்லிக்கட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இன்னும் சில நாள்களே ஜல்லிக்கட்டுக்கு இருக்கக்கூடிய நிலையில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் ஜல்லிக்கட்டின்போது ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து மாடுபிடி வீரர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இது குறித்து செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் கூறுகையில், "தமிழ்நாடு அரசின் மூலம் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தேவைப்படக்கூடிய அனைத்து முதலுதவி கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த சில வருடங்களாகவே ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காயங்கள் ஏற்படக் கூடிய நபர்களை நாங்கள் சிறந்த முறையில் பாதுகாத்து அவர்களுக்கு உரிய முதலுதவிகளை வழங்கிவருகிறோம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் உயிரிழப்பில்லா ஜல்லிக்கட்டு என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது. மதுரை செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக நாங்கள் 10 பேர் கொண்ட குழுவினர் மிகச் சிறப்பான முறையில் பணியாற்றிவருகின்றோம்" என்றார்.
இதையும் படிங்க:
படித்தது ஆங்கில இலக்கியம்! பிடித்தது காளை வளர்ப்பு! - காளைகளின் தங்கச்சி கனிமொழி