நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சட்ட விரோதமாக சென்னையைச் சேர்ந்த மாணவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாகக் கூறி தேனி கண்டமனுர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர் சார்பில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பின்னர் சென்னை மாணவர் அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் உள்ளிட்டோரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்த மாணவரின் ஜாமீன் மனுவை, ஏற்றுக்கொண்டு கடந்த 15ஆம் தேதி இந்த ஜாமீன் வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேனி நீதிமன்றதில் சென்னை மாணவரின் தந்தை வெங்கடேசன் ஜாமீன் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மாற்றினால், அந்த மாணவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், "வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல சென்னை மாணவரின் தந்தை மருத்துவர் வெங்கடேசன் நடந்து கொண்டுள்ளார். தனது மகனின் வாழ்க்கையை பாழாக்கியுள்ளார். ஒரு நல்ல மருத்துவர் செய்யக்கூடிய வேலை இது அல்ல. அரசு மருத்துவராக பணியில் இருப்பவர் இது போன்ற வேலையில் ஈடுபடலாமா? ஒட்டுமொத்த தேர்வு முறையிலும் குளறுபடி உள்ளது என எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதி, நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்ட சென்னை மாணவருக்கு ஜாமீன் வழங்கியதுடன் மதுரை சிபிசிஐடி டி.எஸ்.பி.முன் தினசரி காலை 10:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்தார். அந்த மாணவரின் வயதையும் வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஜாமீன் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படியுங்க:
நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் உதித் சூர்யாவின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு