மதுரை: திருச்செந்தூரை சேர்ந்த ஸ்ரீ அம்பிகை தசரா குழுவின் செயலர் கண்ணன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வர் ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களது கலாச்சாரத்தின் படி ஆடைகள் அணிந்து விழாவில் கலந்து கொள்வர்.
இந்த திருவிழாவில் கடவுள், விலங்குகள், பறவைகள் போன்று வேடம் அணிந்து வழிபடுவது வழக்கம். இந்த நிகழ்வுகளில் சினிமா, டிவி, நாடக நடிகர்களை சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள அழைப்பது வழக்கம். அந்த சினிமா, டிவி நடிகைகள் ஆபாச நடனம் ஆடுவதாக கூறி அவர்களை திருவிழாவில் அனுமதிக்க கூடாது என்று மனு தாக்கல் செய்யப்பட்டு அதில் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அவ்வாறு ஆபாச நடனம் நடத்தப்படுவதில்லை. ஆகவே திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா திருவிழாவில் சினிமா, டிவி மற்றும் நாடக நடிகர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவின்போது சினிமா, டிவி மற்றும் நாடக நடிகர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்க கூடாது.
தசரா திருவிழாவின்போது நடைபெறும் ஆடல், பாடல், கலை, பிற நிகழ்ச்சிகள் நடத்த உரிய அனுமதி பெற வேண்டும். தசரா திருவிழாவின்போது நடைபெறும் ஆடல், பாடல், கலை, மற்ற நிகழ்ச்சிகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். நிகழ்ச்சியின் போது ஆபாச நடனங்கள், தகாத வார்த்தைகள் உபயோகித்தால் நிகழ்ச்சியை காவல்துறையினர் நிறுத்தலாம்.
ஆபாச நடனங்கள் தகாத வார்த்தைகள் போன்றவை நிகழ்ச்சியில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட சினிமா, டிவி, நாடக நடிகர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்வதற்கான கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் குற்றங்கள் - காவல் துறைக்கு கோரிக்கை விடுத்த நடிகை அம்பிகா