டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, புளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பிறகே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது.
இதன்பின்னர், டிக் டாக் செயலியைத் தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் பிராங்ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்களுக்கும், அதனை தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.