மதுரை: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (48), இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், அதே பகுதியைச் சேர்ந்த 13, வயது சிறுமியை மாரியப்பன் பாலியல் வல்லுறவு தொல்லை கொடுத்து கருவுற்ற சிறுமி பெண் குழந்தையும் பெற்றெடுத்தார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர், ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பழக்கடை மாரியப்பன் மீது புகார் தெரிவித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார், பழ வியாபாரி மாரியப்பனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட மாரியப்பனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்புவழங்கினார். இந்த தீர்ப்பு சட்ட விரோதமானது, யூகத்தின் அடிப்படையில் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே கீழமை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டும் என மாரியப்பன் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை மாரியப்பனுக்கு சாதகமாக உள்ளது. குழந்தையின் டிஎன்ஏ மாதிரியின் பரிசோதனை முடிவும். மாரியப்பனின் டிஎன்ஏ மாதிரியின் பரிசோதனை முடிவும் ஒத்து போகவில்லை. மாரியப்பன் குழந்தையின் உண்மையான தகப்பன் இல்லை என்று தெரிந்தும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கின்றது.
மேலும் சிறுமிக்கு பிறந்த குழந்தையின் ரத்த மாதிரிகள் ஏற்கனவே எடுத்து சேகரிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சந்தேகப்படும் நபர்களை பிடித்து அவர்களின் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதி இந்த வழக்கில் மாரியப்பனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் உண்மை குற்றவாளிகளை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நான்கு மாதத்தில் கண்டறிய வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.