மதுரை: மதுரையைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் ஒரு லேப் டெக்னீசியன். மதுரையில் ஸ்பாட் டயக்னாஸ்டிக் சென்டர் மற்றும் நோயறிதலுக்கான அங்கீகரிக்கப்பட்ட மாதிரி சேகரிப்பு மையத்தையும் நடத்தி வருகிறேன். விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் போன்ற அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் மாதிரிகளை சேகரித்து வருகிறேன்.
இதன் மூலம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா தளவாய்புரத்தில் மருத்துவர் எம்.திலகவதியுடன் அறிமுகமானேன். பின்னர், காலப்போக்கில் மருத்துவர் எம்.திலகவதி இந்து வண்ணான் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்குப் பதிலாக புதரை வண்ணன் சமூகத்தைச் சேர்ந்தவர் என போலி சமூகச் சான்றிதழைப் பெற்றுள்ளார் என்பது எனக்குத் தெரியவந்தது. புதரை வண்ணான் சமூகம் ஒரு பட்டியல் இன வகுப்பைச்சார்ந்த சமூகமாகும் மற்றும் இந்து வண்ணான் சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சமூகம் ஆகும்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் எம்.திலகவதி உட்பட அவரது உறவினர்கள் கலாவதி, ராஜசேகர், சிவக்குமார் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் இந்து வண்ணான் சமூகத்திற்குப் பதிலாக புதரை வண்ணன் சமூகத்தின் போலி சமூகச் சான்றிதழைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு சலுகைகளை பெற்றுள்ளனர்.
ஆகவே, போலிச் சமூகச் சான்றிதழைப் பெற்றதற்காக மருத்துவர் எம்.திலகவதி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார் ஆனால் தற்போது வரை எந்தவித மேற்படி நடவடிக்கையும் இல்லை.
எனவே, போலிச் சமூக சான்றிதழைப் பயன்படுத்தி இடஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு சலுகைகளை பெற்றுள்ள மருத்துவர் எம்.திலகவதி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், சமூகச் சான்றிதழ்களை ஆய்வு செய்வதற்காக மாவட்ட அளவிலான ஆய்வுக் குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜாதி சான்றிதழ் தொடர்பாக நீதிமன்றம் வழிமுறைகளை பிறப்பித்து 29 ஆண்டுகள் ஆகியும் ஏன் தமிழக அரசு தற்போது வரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை?
ஜாதி சான்றிதழ் குறித்து விசாரணை செய்வதற்கு மாவட்ட அளவிலான அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது அப்படி இருக்கையில் தாசில்தாருக்கு அதிகாரம் வழங்கியது யார்? என கேள்வி எழுப்பியதோடு ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு விட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.