மதுரையைச் சேர்ந்த தமிழரசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நாங்குநேரி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வசந்தகுமார் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியின் மக்களவை உறுப்பினராக வெற்றிபெற்றார். இதனையடுத்து நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா செய்தார்.
இதனைத்தொடர்ந்து நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசு கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பணிக்காக செலவு செய்கிறது. ஏற்கனவே தமிழ்நாடு பல ஆயிரம் கோடி கடனில் இயங்கிவருகிறது. இந்நிலையில், இந்த இடைத்தேர்தல் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தியிருக்கும்.
இதற்காகச் செலவிடப்பட்ட தொகை மக்களின் வரிப்பணமாகும். ஆகவே நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்கு காரணமான வசந்தகுமாரிடமிருந்து இடைத்தேர்தலுக்கான செலவை வசூலிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியும் எவ்விதப் பதிலும் இல்லை.
மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்கும் வகையில் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவை முன்னாள் எம்எல்ஏ வசந்தகுமாரிடமிருந்து குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் வசூலிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பான தரவுகளையும், இதேபோன்று தாக்கல் செய்து தள்ளுபடியான வழக்கின் உத்தரவையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நில அபகரிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரான மு.க. அழகிரி