நெல்லை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி தனிமாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்துடன் ஆலங்குளத்தை இணைக்காமல் நெல்லையுடனே இருக்க வேண்டும் என்று ஆலங்குளம் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆலங்குளத்தை சேர்ந்த பொன்னுத்துரை என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார் .
அம்மனுவில், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, தென்காசி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதற்கென்று சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். அதன் அடிப்படையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திலும், அன்று மாலை 3 மணிக்கு குற்றாலத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
ஆனால், இதில் பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை. அதில்,பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை, பெரும்பாலும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களே பொதுமக்கள் போல் கலந்து கொண்டனர். இந்தக் கருத்து கேட்புக் கூட்டத்தில், பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை. போதிய விளம்பரம் செய்யப்படவில்லை .ஆலங்குளத்தில் வசிக்கும் மக்கள் தென்காசி செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதி இல்லை.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் 32 கல்லூரிகள் உள்ளன, தென்காசியில் 2 கல்லூரிகள் மட்டுமே உள்ளது. எனவே ஆலங்குளத்தை , தென்காசி மாவட்டத்துடன் சேர்க்காமல் தற்போது உள்ளபடி நெல்லை மாவட்டத்துடனே இருக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன்பின்னர், தென்காசி மாவட்டத்தில் எந்த தாலுகாக்களை இணைக்கப்படும் என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்.