மதுரை: தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை வைத்திருந்த வழக்கில் குமரேசன் என்பவருக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதுடன் ரூ.5,30,000 பணத்தை வழக்கு நடைபெறும் கீழமை நீதிமன்றத்தில் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குமரேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளது. மேலும், அவரிடம் இருந்து ரூபாய் 5 லட்சத்து 30 ஆயிரம் என பெரிய தொகை அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நண்பர்களுடன் தனிமையில் இருக்க வைத்து வீடியோ எடுத்த கணவர்.. காவல்துறையில் கண்ணீர் மல்க பெண் புகார்!
இதற்கு மனுதாரர் தரப்பில், இனி இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இனி தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா போன்ற பொருள்கள் விற்பனை செய்ய மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் வழங்க வேண்டும்; ரூ.5,30,000 பணத்தை வழக்கு நடைபெறும் கீழமை நீதிமன்றத்தில் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினந்தோறும் காலை 10:30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஜாமீன் காலத்தில் வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: டிஐஜி விஜயகுமார் வழக்கை சிபிஐ மூலம் விசாரிக்கப்பட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்