மதுரை: தமிழ்நாட்டில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் காணப்பட்ட மாநில மரமான பனை மரங்கள் தற்போது, அழிந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனிடையே, சாலையோரங்களில் அவற்றை நட்டு பராமரித்து வரும் பணியை அரசும் மற்றும் பிற அரசு சாரா நிறுவனங்களும் முன்னெடுத்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சில பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள பனை மரங்களை அடையாளம் தெரியாத சிலர், வெட்டி அழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில், பனை மரங்கள் வெட்டுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் 'ராமநாதபுரம் மாவட்டம், சிறாய்குளம் கிராமத்தில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருக்கின்றன. மேலும், அருகில் இருக்கக்கூடிய சாயல்குடி, ஏர்வாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலும் பல ஆயிரம் பனை மரங்கள் இருக்கின்றன. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பனை மரங்கள் இருக்கின்றன. பனை மரங்களில் இருந்து பனங்கற்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளியில் படிப்பு.. பார்ட் டைம் தொழிலதிபர்கள்.. நுங்கு வியாபாரத்தில் அசத்தும் புதுக்கோட்டை சிறுவர்கள்!
பனை மரங்கள் இருக்கும் பகுதிகள், அரசு புறம்போக்கு பகுதிகளாகும். ஆனால், தற்போது சிலர் சுய லாபத்திற்காகவும் பனை மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, கடலாடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பனைமரம் வெட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று (ஏப்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர் குறிப்பிடுமிடம் தனி நபர் சொந்தமான இடம் என்பதால் ஏதும் செய்ய முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசு புறம்போக்கு நிலத்திலும் பனை மரங்கள் வெட்டப்படுவதாகத் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதிகள் தனியார் நிலம், பட்டா இடங்களில் மரம் வெட்டப்படுவது குறித்து நாங்கள் ஏதும் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும்; மேலும், அரசு நிலங்களில் பனை மரங்கள் வெட்டப்படுவது குறித்து அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: 'இது எங்கள் மண்; இதை ஒரு காலத்திலும் விட்டுக்கொடுக்கமாட்டோம்' - போராட்டத்தை வாபஸ்பெற்ற மீனவர்கள்