மதுரையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், "தமிழ்நாடு சிறைகளில் 15 ஆயிரம் கைதிகள் உள்ளனர். அனைத்துச் சிறைகளிலும் நெரிசல் காணப்படுகிறது. சிறையில் கரோனா பரவினால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும். இதனால் சிறையில் கரோனா பரவலைத் தடுக்கவும், கைதிகளின் பாதுகாப்புக்காகவும் சில அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிறு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்வதையும், கைது செய்யப்படுவோரை சொந்த பிணையில் விடுதலை செய்ய வேண்டும். பரோலில் ஏற்கனவே விடுதலை ஆனவர்களுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கவும், பரோல் கேட்டு மனு அளித்தவர்களின் மனுவை விரைவில் பரிசீலித்து பரோல் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் புதிய கைதிகளை 14 நாள் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும், அனைத்து கைதிகளையும் உடல் நல பரிசோதனைக்கு உட்படுத்தி கரோனா அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த தனி வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும் முன்கூட்டியே விடுதலை வழங்குவது, பரோல் காலத்தை நீட்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. குண்டாஸ் குற்றச்சாட்டை உறுதி செய்வதற்கான ஆலோசனைக் குழு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.
சிறைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சிறையில் இருப்பவர்களுக்கு நீண்ட கால பரோல் வழங்குவது சாத்தியமில்லை. ஏனெனில் கரோனா நோய்த் தொற்று பரவிவரும் சூழலில் வெளியே செல்பவர்களுக்கு நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது' என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் மனுதாரரின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அவரே தெரிவித்து இருக்கிறார். ஆகவே இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க... ஆன்லைன் வர்த்தக மோசடி வழக்கு; பிணை மனு தள்ளுபடி