மதுரை: உமச்சிகுளம் அருகேயுள்ள செட்டிக்குளம் வரையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் 7.5 கிலோ மீட்டர் நீளத்தில் 544 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழி மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று (ஆக.28) மதியம் நாராயணபுரம் பேங்க் காலனி பகுதியில் மேம்பாலத்தை இணைக்கும்போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக இணைப்புக் கட்டுமானம் பாலத்தின் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு பணியிலிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கட்டட இடிபாட்டில் சிக்கிய மேலும் ஒரு தொழிலாளி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மூன்று பேர் மீது வழக்குப்பதிவு
இந்த விபத்து தொடர்பாக மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட ஜேம்சி ப்ரோஜெக்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்டப் பொறுப்பாளர் பிரதீப் குமார், ஜெயின் கட்டுமானப் பணிகள் பொறியாளர் ஜதேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின்களை ஒப்பந்தத்திற்கு வழங்கியிருக்கும் ஷெல் மேக நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட மூவர் மீதும் IPC 287 அஜாக்கிரதையாக இயந்திரங்களைக் கையாள்வது, 304 (A) விபத்தில் உயிரிழப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே விபத்து நடைபெற்ற பகுதியில் கீழே விழுந்த தூண்களை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அலுவலர்கள் தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் ஹைட்ராலிக் இயந்திரங்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கியுள்ள செல் மேக் நிறுவனத்தைச் சேர்ந்த பாஸ்கரனை காவல் துறையினர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : ஆசிரியர்கள் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தினாலும் பணிக்கு வரலாம் - அமைச்சர் தகவல்