மதுரை: தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நேற்று (மார்ச் 19) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், வேளாண் பட்ஜெட் குறித்து மதுரை மாவட்டம் துவரிமானைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ராமசாமி தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அவர் வழங்கிய நேர்காணலில், "பட்ஜெட்டில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இந்த முயற்சி வரவேற்க கூடிய ஒன்றாகும். தனி பட்ஜெட் என்பதால் இனி வரக்கூடிய காலங்களில் வேளாண்துறை தனிக்கவனம் பெறக்கூடிய ஒன்றாக மாறும்.
இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைக்க வேண்டும்
இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையக்கூடிய சிறப்பு பயிர்களைப் பொறுத்து, அந்தந்த மாவட்டங்கள், சிறப்பு மண்டலங்கள் என்ற நிலையைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு இந்த வேளாண் பட்ஜெட்டில் இருப்பதாக நான் உணர்கிறேன். இயற்கை வேளாண்மை குறித்த அறிவிப்பை முழுவதுமாக நாங்கள் வரவேற்கிறோம். இது அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைவதற்கான ஒரு முன்னோட்டம் என்பதால், இந்த விஷயத்தில் எங்களுடைய ஒத்துழைப்பு தமிழ்நாடு அரசுக்கு முழுமையாக உண்டு.
தமிழ்நாடு வேளாண் துறையோடு இணைந்து ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று இயற்கை வேளாண்மை குறித்து தொடர் பயிற்சிகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். கடந்த 6 மாதங்களில், 15 வகுப்புகளுக்கு குறையாமல் மதுரை மாவட்டத்தில் எங்களது இயற்கை விவசாயக் குழு மூலமாக நாங்கள் பயிற்சி வழங்கியுள்ளோம். தமிழ்நாடு அரசின் தற்போதைய அறிவிப்பு எங்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. இதனை இன்னும் வேகப்படுத்த வேண்டும்.
இயற்கை விவசாயத்தில் ஈடுபடக்கூடிய நபர்களுக்கு முறையான புரிதல் இருக்காது. ஆகையால், அவர்களுக்கு என்ன தேவை என்பது குறித்த அடிப்படையான தெளிவினை ஏற்படுத்த வேண்டும். இதற்காக, எங்களைப் போன்ற இயற்கை விவசாயிகளை தமிழ்நாடு அரசு அதிகம் பயன்படுத்த வேண்டும்.
இதனை செயல்பாட்டு முறையில், களத்தில் இறங்கி புரிதலை ஏற்படுத்துவது அவசியம். குறிப்பாக, இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் நபர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்ட வேண்டும். தற்போது மாவட்டந்தோறும் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றாலும், அதனை விரைந்து முடிக்க வேண்டும்.
சிறுதானியங்கள் விலையை குறைக்க வேண்டும்
விவசாயத்தில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவது குறித்த அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மரபு சாரா ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் பெருமளவு பயனடைய வாய்ப்புண்டு. மேலும், விவசாயம் மேற்கொள்ள போதுமான கூலி ஆட்கள் கிடைக்காதது பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், இயந்திரமயமாக்கல் குறித்த அறிவிப்பும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கு வேளாண் பொறியியல் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விவசாயத்தில் எந்தெந்த பணிகளில் இயந்திரமயமாக்கல் வேண்டும் என்பது குறித்த தெளிவான புரிதலை விவசாய கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும்.
இயற்கை விவசாயத்திற்கு அடிப்படையாகத் திகழ்வது இடுபொருட்கள். பயிர்களின் வளர்ச்சிக்கு ஊக்கியாகத் திகழக்கூடிய இடுபொருட்கள் குறித்த அரசின் அறிவிப்பு மிகச் சிறப்பு. இயற்கை இடுபொருட்கள் விநியோகத் திட்டத்தின் மூலமாக பயிர்களின் மகசூலை பெருமளவு அதிகரிக்க முடியும் என நம்புகிறேன்.
அதேபோன்று இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அறிவிப்பையும் முழுமையாக வரவேற்கிறோம். ஒரு காலத்தில் சிறுதானியங்களே மிக முக்கிய உணவாக இருந்தன. துரித உணவுப் பழக்கத்தால் ஏற்பட்ட விளைவுகளை உணர்ந்த மக்கள் சிறுதானியத்தின் அருமையை உணரத் தொடங்கியுள்ளனர். சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
சிறுதானியங்களுக்கென ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்முறை மையங்கள் அமைக்கப்படுவது அவசியம். கம்பு, கேழ்வரகு போன்றவற்றை உற்பத்தி செய்துவிடலாம். ஆனால், அவற்றை சிறந்த முறையில் பிராஸஸிங் செய்வது மிகவும் கடினமான ஒன்று. முன்னர் நமது வீட்டிலிருந்த பெண்களுக்கு இதனை உமி நீக்கி சுத்தம் செய்கின்ற விஷயம் தெரியும். தற்போது அதற்கான கால அவகாசமில்லை. இதனால் ஏற்படக்கூடிய செயல்முறை செலவுகள் காரணமாக, சிறுதானியங்களின் விலையும் அதிகமாக உள்ளது. அதனைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்.
பாரம்பரிய அரிசி ரக விற்பனைக்கும் அனுமதி வேண்டும்
தமிழ்நாடு அரசு, காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் அதிகரித்துள்ள நிலையில், பாரம்பரிய ரகங்களை மீட்க, அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது. காய்கறி மண்டலங்கள் பிரிக்க வேண்டியதும் அவசியம். ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் தக்காளி, பீட்ரூட் போன்றவை அதிகம் விளைகின்றன. இந்நிலையில், இதற்காக அரசு ரூ.2 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது எந்தளவுக்குப் பயனளிக்கும் என்பது தெரியவில்லை.
சிறுதானியப் பயிர்கள் விற்க ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள ஒரு உழவர் சந்தைக்கு அனுமதி அளித்துள்ளது. வெறுமனே சிறுதானியப் பயிர்கள் மட்டுமன்றி, பாரம்பரிய அரிசி ரக விற்பனைக்கும் அனுமதி அளிக்க வேண்டும். இதற்கென்று, உழவர் சந்தைகளில் தனி கடைகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.
வருங்காலத்தில் விவசாயத்தின் இருப்பைத் தீர்மானிக்கக்கூடிய உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு குறித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரிய ஒன்று. இதுதான் விவசாயிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடியது. இதன்மூலம் சிறு, குறு விவசாயிகள் பொருளாதார ரீதியிலும் முன்னேறுவதற்கான அடித்தளம் அமையும். விவசாயத்தில் ட்ரோன்கள் பயன்படுத்துவது குறித்த அறிவிப்பு என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இனிதான் உணர முடியும்.
எங்களைப் போன்ற இயற்கை விவசாயிகளை முழுமையாகப் பயன்படுத்தி, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு விரைவுப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்: சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அரசு விருது!