விருதுநகர்: மதுரையைச் சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வரிச்சியூர் செல்வம் ரவுடித்தனத்தை விட்டுவிட்டு அமைதியான முறையில் வசித்து வருவதாகக் கூறி வந்தார். ஆனாலும், இவரது நடவடிக்கைகளைக் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு, நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக இவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த முருகலட்சுமி என்பவர் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியான தனது கணவர் செந்தில் குமார் (39) என்பவரைக் காணவில்லை என்று விருதுநகர் கிழக்கு காவல் துறையினர் கடந்த 2021ஆம் ஆண்டு புகார் செய்திருந்தார்.
இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மனைவி முருகலட்சுமி மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தென் மண்டல ஐஜி தலைமையில் தனிப்படை அமைத்துக் காணாமல்போன செந்தில் குமாரைக் கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் அடிதடி: கவுன்சிலரின் மண்டையை உடைத்த போதை ஆசாமிகள் - நடந்தது என்ன?
அதன்படி தென் மண்டல ஐஜி தலைமையில் அருப்புக்கோட்டை ஏஎஸ்பி கருண் கரட் வழிகாட்டுதல்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டு, செந்தில் குமாரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. செந்தில் குமாரின் கடைசி செல்போன் அழைப்புகளைக் காவல் துறையினர் ஆய்வு செய்தபோது அவர் கடைசியாக வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளியுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.
இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது வரிச்சியூர் செல்வம், செந்தில்குமார் இடையே மோதல் போக்கு நிலவியதும் இதனால் 6 பேருடன் சேர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை செய்து தாமிரபரணி ஆற்றில் சடலத்தை வீசியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கூட்டாளியைக் கொலை செய்த வழக்கில் வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து வரிச்சியூர் செல்வத்தைக் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மற்றவர்களைக் கைது செய்யும் பணியில் காவல் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, கொலை வழக்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட தென் மண்டல ஐஜி, அருப்புக்கோட்டை ஏஎஸ்பி, சங்கரன்கோவில் டிஎஸ்பி ஆகியோர் அடங்கிய குழுவினருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரூரில் தொடரும் சாதிய வன்கொடுமை: போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு!