மதுரை: பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏலங்களில் வெளிப்படைத் தன்மை இல்லாததால், மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன.
இதனை போக்கும் பொருட்டு, மதுரை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற கார்த்திகேயன், மாநகராட்சி நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்து, ஏலம் விடப்படுவது தொடர்பாக வெளிப்படையான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான 28 வார சந்தைகள், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள 22 கட்டண கழிவறைகள், வாகன காப்பகங்கள், ஆடு மாடு வதைக் கூடங்கள், புல் வளர்ப்பு பண்ணைகள் என மொத்தம் 67 இடங்களுக்கு ஏல அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் பங்கேற்கும் பொதுமக்கள் வருகின்ற ஜூலை 26ஆம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளி செலுத்தி, அனுமதி சீட்டு பெற வேண்டும் எனவும்; பொது ஏலம் ஜூலை 27ஆம் தேதி மதுரை மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் நடைபெறும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.