மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று சமயத்தில் மாவட்டங்களிலிருந்து வேறுமாவட்டங்கள் செல்வதற்கும், மாநிலங்களிலிருந்து வேறுமாநிலங்களுக்கு செல்வதற்கும் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பித்தவர்கள் பலருக்கு இ-பாஸ் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ஏராளமானோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி மன உளைச்சலை எதிர்கொண்டுள்ளனர்.
வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை பிறப்பித்த அரசாணையின்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாநிலங்களிலிருந்து மாநிலங்கள் செல்வதற்கும் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம், இறப்பு, மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என கூறி அதற்கு உரிய சான்றுகள் இருந்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஆகையால் இவற்றை கருத்தில் கொண்டு வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை பிறப்பித்த இ-பாஸ் தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.