மதுரை: தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை உறுதிச் சட்டத்தை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள், மாணவர்களின் மீது மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவசரம் அவசரமாக மதுரை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் வேலைக்கு செல்வதில் பிரச்னையும், வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட், வாகன ஓட்டுநர் உரிமம் எடுப்பதில் பிரச்னையும் ஏற்பட்டது.
எனவே, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வழக்கறிஞர் போனிபாஸ் உள்ளிட்ட 26 நபர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நாகார்ஜூன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 மணி நேரம் வேலை சட்ட மசோதாவை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அந்த சட்டத்தை திரும்பப் பெற்றது .
ஆனால், போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவசரம் அவசரமாக மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இது ஏற்கத்தக்கது அல்ல. அரசே அதன் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது” என வாதிட்டார். இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உங்க சிஸ்டமே சரியில்லை! ராணுவ வீரர்கள் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவில் மத்திய அரசின் பதிலை ஏற்க மறுத்த நீதிபதி!