மதுரை: மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் 2019ஆம் ஆண்டு முதல் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஏ.கனகசுந்தர் தாக்கல் செய்த மனுவில், “மதுரை கோட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் 500 தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஊதியத்தை விட, குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது.
இதனால் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர், தற்காலிக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அரசு போக்குவரத்துக் கழகத்தில் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அமல்படுத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் 31.12.2018-இல் அரசு பிறப்பித்துள்ள அரசாணை மற்றும் 18.3.2019-இல் ஏற்பட்ட உடன்படிக்கை அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் பெற தகுதியானவர்கள்.
அரசுத் தரப்பில் தற்காலிகப் பணியாளர்களுக்கு போனஸ், பேட்டா, உணவுச் சலுகை, இலவசப் பேருந்து பயண அட்டை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பள விகிதத்துக்குள் வராது.
எனவே, மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் அனைத்து தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசாணை மற்றும் 2019 உடன்படிக்கை அடிப்படையில், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் 1.4.2019 முதல் ஊதிய நிலுவைத் தொகையை 8 வாரத்தில் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு மனைவி மீதான வழக்கு; உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!