மதுரை: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கண் புற்றுநோய் பிரிவின் தலைவர் உஷா கிம், அமெரிக்க கண் மருத்துவ சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கண் மருத்துவத்திற்கான சிறந்த மருத்துவர் விருதினைப் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
அமெரிக்க கண் மருத்துவ சங்கத்தின் (American Academy of Ophthalmology - AAO) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளிலுள்ள கண் மருத்துவர்களின் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவ வல்லுநர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அமெரிக்கா, இல்லினாய்ஸ், சிகாகோவில் உள்ள மெக்கார்மிக் பிளேஸில் ஆண்டு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 2 ஆயிரத்து 130 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டன. அவற்றில் 72 மட்டுமே தகுதிக்குரியனவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அதில் மருத்துவர் உஷா கிம் வழங்கிய ஆய்வுக் கட்டுரை சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு, அக்கட்டுரை முதல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு ஏற்படும் கண் புற்றுநோய், குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை, திறமை மிகு மருத்துவம் மற்றும் செயல்பாடுகளை மருத்துவர் உஷா கிம் ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் மருத்துவர் உஷா கிம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண் மருத்துவத்துறை சார்ந்து பணியாற்றி வருகிறார். அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருத்துவர் வில்லியம் பி.ஸ்டீவர்ட் வழிகாட்டுதலின் கீழ், கண் அறுவை சிகிச்சை, கண் புற்றுநோய்த் துறையில் சிறப்பு பயிற்சி பெற்றவர்.
இதையும் படிங்க: முதுகுத்தண்டு உணர்திறன் நரம்புகளைத் தூண்டும் அறுவை சிகிச்சை வெற்றிகரம்..இந்தியாவில் இதான் முதன்முறை!
கடந்த 20 ஆண்டுகளில் அரவிந்த் கண் மருத்துவமனை 6 லட்சத்து 41 ஆயிரத்து 701 கண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. 1 லட்சத்து 47 ஆயிரத்து 8 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. கண் அறுவை சிகிச்சைக்கான உலக முக்கியத்துவம் வாய்ந்த மையங்களுள் ஒன்றாக அரவிந்த் கண் மருத்துவமனை திகழ்கிறது. மருத்துவர் உஷா கிம் தலைமையிலான மருத்துவக்குழுவின் நிபுணத்தன்மையும் இதற்கு முக்கிய காரணமாகும்.
கண் மருத்துவம் மேற்கொள்ள இயலாத ஏழைகளின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு கண் புற்றுநோய் சிகிச்சைக்கான நிதியம் ஒன்றை உருவாக்கி, அத்திட்டத்தின் கீழ் 7 ஆயிரம் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளித்துள்ளார்.
இவரது தலைமையின் கீழ் 80 கண் மருத்துவர்கள் நீண்டகால அடிப்படையிலும், சர்வதேச அளவில் 74 ஆய்வாளர்கள் குறுகிய காலப் பயிற்சியிலும் டாக்டம் உஷாவிடம் பயிற்சி பெற்றுச் சென்றுள்ளனர். அதுமட்டுமன்றி கூடுதலாக, உலகம் முழுவதிலுமிருந்து 80 கண் மருத்துவர்கள் கண்ணுக்கான செயற்கை கருவிகளை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப திறன்களில் பயிற்சி பெற்றுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்