புதுடெல்லி: மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 132 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 தொகுதிகளிலும், என்சிபி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் யார் அடுத்த முதல்வர் என்ற சர்ச்சை மகாயுதி கூட்டணி கட்சிகளுக்கிடையில் வெடித்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு குரல்
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி பேச்சுவார்த்தை போதும், மகாயுதி கூட்டணி அமைந்து வேட்பாளர்கள் களத்தில் இருந்தபோதும் யார் முதல்வர் வேட்பாளர் என்பது அறிவிக்கப்படாமலே இருந்தது. தற்போது வரை அந்த மர்மம் நீடிக்கிறது. சிவசேனா தரப்பில் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருந்து வருகிறது. ஆனால், கூட்டணியில் அதிகபட்ச தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாஜக அந்த பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக இருக்கிறது.
அந்த வகையில், சிவசேனா கட்சியின் எம்பி நரேஷ் மஸ்கே, எம்எல்ஏ-க்கள் சஞ்சய் ஷிர்சாத், பாரத் கோகவாலே ஆகியோர் ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா மற்றும் பாஜக மூத்த தலைவர் ராவ்சாகேப் தன்வே ஆகியோர் அந்த கோரிக்கையை தட்டி கழித்துள்ளனர்.
இதையும் படிங்க: எதிர்கட்சி உறுப்பினர்களின் 18 ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ்களும் தள்ளுபடி.... மாநிலங்களவையில் இன்று நடந்தது என்ன?
பீகாரின் நிலைமை வேறு
மேலும், ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள், எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், பீகாரில் நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றதை மேற்கோள்காட்டி, பாஜகவிடம் முறையிட்டு வருகின்றனர். ஆனால், பாஜக தரப்போ, பீகாரின் நிலைமை வேறு, அதனை மகாராஷ்டிராவில் பின்பற்ற முடியாது என திட்டவட்டமாக இருந்து வருகிறது.
இழுபறி
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தான் நடைபெற வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி இருந்ததாகவும், தேர்தல் வெற்றிக்கு ஷிண்டேதான் அடித்தளம் என்று எம்பி நரேஷ் மஸ்கே கருதுகிறார். எனவே, ஹரியானா சட்டமன்ற தேர்தலின்போது நயாப் சிங் சைனியின் தலைமையில் தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு பிறகு அவரே முதல்வராக பதவியேற்றார். அதுபோல, மகாராஷ்டிராவிலும் ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வராக வேண்டும் என்று சிவசேனா தரப்பினர் முனைப்புடன் இருந்து வருகின்றனர். ஆனால், இந்த கூற்றை பாஜக தரப்பு ஏற்காமல் இருப்பதாலும், முதல்வர் பதவியை சிவசேனா விட்டுக்கொடுக்க விரும்பாததாலும் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
முடிவு யாரிடம்?
இதுகுறித்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா பேசுகையில், ''ஒரு எம்.பி.யின் அறிக்கையை கட்சியின் அறிக்கையாக எடுத்துக்கொள்ள கூடாது. எங்கள் கூட்டணிக்குள் நல்ல ஒத்துழைப்பு உள்ளது. முன்னதாக பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுமா என்ற சந்தேகம் மக்களுக்கு இருந்தது. பாஜகவின் நாடாளுமன்றக் குழுவும், மூன்று கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களும் அமர்ந்து இது குறித்து முடிவெடுப்பார்கள். முதல்வர் யாராக தேர்தெடுக்கப்பட்டாலும் எங்கள் ஆட்சி வலுவாக இருக்கும்.
அதேபோல, பீகாரில் நடந்தது போல மகாராஷ்டிராவில் நடக்காது. பீகாரில் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவித்திருந்தோம். மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை, தேர்தலுக்குப் பிறகே முதல்வரின் பெயர் அறிவிக்கப்படும் என்று எங்களுக்குள் முடிவு செய்யப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே பொறுப்பான மனிதர். அவருக்கு எல்லாம் தெரியும். எனவே, அவரது கட்சி எம்.பி., எம்எல்ஏக்கள் கூறியதை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்