மதுரை: சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். கடத்தல் வழக்கு விசாரணைக்காக 2019-ம் ஆண்டு அவனியாபுரம் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதால் பாலமுருகன் மரணமடைந்ததாகவும், உடற்கூராய்வின்போது வீடியோ பதிவு செய்யவும் பாலமுருகனின் தந்தை முத்துகருப்பன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணை நிலுவையிலிருந்தபோது, முத்துகருப்பன் தனது மனுவை திரும்பப்பெற்றார். இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் காவல்துறையினர் அச்சுறுத்தல் காரணமாக முத்துகருப்பன் தனது மனுவை திரும்பப்பெற்றார் என கூறியிருந்தார்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாலமுருகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசுவாமி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, "சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. வழக்கில் தொடர்புடைய ஆடியோ மற்றும் தடயவியல் பரிசோதனை ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன" என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், சிபிசிஐடி விசாரணை குறித்த நிலை அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும், ஜனவரி 2022க்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: இரண்டு அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு