மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பகுதியைச் சேர்ந்த உமயச்சந்திரன் என்பவர், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நான் எனது வீட்டில் 450 கிராம் மற்றும் 600 கிராம் எடையுள்ள இரண்டு கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்தேன்.
இந்த தகவல் அறிந்த போலீசார், என் வீட்டில் சோதனை மேற்கொண்டு, என்னை கைது செய்தனர். என்னை போலீசார் அக்டோபர் 12ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இனி மேல் இது போன்ற செயல்கள் மேற்கொள்ள மாட்டேன். எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று (நவ.30) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கஞ்சா செடிகள் வளர்த்து உள்ளார். இதற்கு முன் இது போன்ற வழக்கு இல்லை” என வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரருக்கு எதிராக முந்தைய வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை.
சிறையில் இருந்த காலத்தையும் கருத்தில் கொண்டு, நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி” உத்தரவிட்டார். இதன்படி, மாதத்தின் முதல் வேலை நாளில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.