மதுரை: தென்னிந்திய நதிநீர் இணைப்பு குறித்தும், விவசாயிகள் கோரிக்கை குறித்தும் திருச்சியில் நான்கு வாரங்கள் தொடர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி விவசாயி அய்யாக்கண்ணு அளித்த மனுவின் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சியைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவராக நான் செயல்பட்டு வருகிறேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக எங்கள் சங்கம் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். இந்நிலையில், தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்பது தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை.
இந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, எங்கள் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட திருச்சி சிந்தாமணி அருகே உள்ள இடத்தை ஏற்றுக் கொண்டு, கடந்த ஜூலை 28 முதல் அமைதியான ஆர்ப்பாட்டத்தை தொடங்கிய நிலையில், 15 நாட்கள் மட்டுமே போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது.
மேலும், 4 வாரம் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு அளித்தோம். ஆனால், நிராகரித்து விட்டனர். மேலும் 4 வாரங்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று (நவ.13) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “மனுதாரர் தரப்பு விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியபோது விதிக்கும் நிபந்தனைகளை மீறுகின்றனர். பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் விதவிதமான போராட்டங்களை பொது இடங்களில் நடத்துகின்றனர்.
இதானால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே, அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி வழங்கக் கூடாது” என கூறினார்.
அப்போது நீதிபதி, அனுமதி வழங்கியபோது விதிக்கும் நிபந்தனைகளை மீறுவது ஏன்? பொது மக்களின் கவனத்தை கவரும் வகையில் விதவிதமான போராட்டங்களை பொது இடங்களில் நடத்துவது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், மழை பெய்து ஆரம்ப கட்ட விவசாய பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் போராட்டம் தேவை தான என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது மனு தாரரின் கோரிக்கை குறித்து உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தீபாவளியையொட்டி தமிழகத்தில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் தகவல்!