தமிழர் திருநாளான தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு, மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதனைக் காண பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதில், காளைகளை அடக்குபவர், ஒவ்வொறு சுற்றிலும் தேர்வாகி, அடுத்தடுத்த சுற்றுகளுக்குச் செல்வர்.
இந்நிலையில், முதல் சுற்று முடிவில் 69 காளைகள் பங்கேற்றது. இதில் 55 வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இந்த சுற்றில் இருவருக்கு காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து 2ஆவது சுற்றில் 147 காளைகளும், 110 வீரர்களும் பங்கேற்றனர். இதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவையின் தலைவர் பி.ராஜசேகரன், தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர்களின் காளைகள் களமிறங்கியது.
இதையடுத்து, 3ஆவது சுற்று முடிவில் 271 காளைகளும், 165 வீரர்களும் பங்கேற்றனர். இந்தச் சுற்றில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 4ஆவது சுற்று நடைபெற்று வருகிறது.
முன்னதாக ஜல்லிக்கட்டை காண்பதற்காக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் அவனியாபுரம் வந்த நிலையில், தற்போது ராகுல் காந்தி, கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ஜல்லிக்கட்டை காண்பதற்காக வந்துள்ளனர்.
இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: ராகுல் காந்தி வருகை