தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசுகையில், "இந்தியாவில் உள்ள பல சர்வதேச விமான நிலையங்களைக் காட்டிலும், அதிக மக்கள் வந்துசெல்லும் விமான நிலையமாக மதுரை விமான நிலையம் திகழ்கிறது.
ஆகையால் இதை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் நான் கோரிக்கை-வைத்துள்ளேன். மேலும் இந்தியாவில் மொத்தம் 20 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
இதில் ஒன்பது சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையைவிட மதுரை விமான நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்துசெல்கின்றனர். ஆனால் மதுரை சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படவில்லை.
இது நியாயமா? பிரதமரின் சொந்தத் தொகுதியான வாரணாசி சர்வதேச விமான நிலையத்தில் 2018ஆம் ஆண்டு பயணித்த சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 950 பேர். அதே ஆண்டு மதுரை விமான நிலையத்தில் பயணித்த சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 163 பேர்.
சரியாக இருமடங்கு பயணிகள் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். இதனால் மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.