மாலத்தீவில் இருந்து 173 பயணிகள் ஒன்றிணைந்து தனி விமானம் முன்பதிவு செய்து இன்று மாலை மதுரை விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.
மதுரை விமான நிலையம் வந்தடைந்த 173 பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் 7 நாள்கள் தனிமைப்படுத்துவதற்காக பல தனியார் விடுதிகளில் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு கரோனா தனிமைப்படுத்துதல் முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் மூலம் வந்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை, வாகனம் மூலம் தனியார் விடுதிகள், அரசு முகாம்களுக்கு செல்வது, தனியார் விடுதிகளில் தங்குவதற்காக பணம் கட்ட வேண்டும் என அரசு தரப்பில் கூறுவதாக பயணிகள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வருபவர்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதாகவும் தனியார் விமானம் மூலம் ஒன்றிணைந்து சுய விருப்பத்தின் பேரில் வருபவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை உட்பட அனைத்து செலவுகளுக்கும் தனிப்பட்ட நபர்களுடைய பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது.
173 பயணிகளும் சுய விருப்பத்தின் பேரில் மாலத்தீவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்ததாகவும் அவர்களிடம் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கனவே தெரியப்படுத்திய தாகவும் அலுவலர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இருந்தபோதும் மாலத்தீவில் இருந்து வந்த பயணிகள் அனைவரும் கரோனோ பரிசோதனை உட்பட எதற்கும் பணம் தரமுடியாது என்று பிரச்னை செய்து வருவதால் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விமான நிலைய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.