மதுரை : மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக ஆக.9ஆம் தேதி மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்ட நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்துவந்தனர்.
இந்நிலையில் இன்று (ஆக.13) காலை அவரது உடல் நிலை திடீரென கவலைக்கிடமானது. அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றிரவு காலமானார்.
தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் தலைவர் ஆதீனம் பீடாதிபதி என அழைக்கப்படுகிறார். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
மதுரை ஆதீனத்தின் 292ஆவது பீடாதிபதியாக அருணகிரிநாதர் பொறுப்பில் இருந்தார். மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : மதுரை ஆதீனம் அறைக்குச் சீல்!