மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இளைஞர்களைக் குறிவைத்து ஆன்லைன் மூலமாகவும், வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்புகொண்டு அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கஞ்சாவை வீடுகளுக்கே சென்று விற்றுவருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்ற இளைஞரைப் மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், அவர் இருசக்கர வாகனத்தில் பதுக்கிவைத்திருந்த 8.5 கிலோ கஞ்சா கண்டறிப்பட்டது.
உடனடியாக அவரைக் கைதுசெய்த காவல் துறையினர், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்தது மதுரை பெத்தானியபுரத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்பது தெரியவந்தது.மேலும் இவரைச் சேர்ந்த கும்பல் மாணவர்களைக் குறிவைத்து செல்போனில் தொடர் கொண்டு கஞ்சா பொட்டலம் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என ஆஃபரில் விற்பனை செய்ய முயன்றதும் விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவரிடமிருந்த 8.5 கிலோ கஞ்சா, விற்பனைக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல்செய்த காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.