திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை கிராமத்தில் ஸ்ரீ கதிர் நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. அதே பகுதியில் பல திருக்கோயில்கள் உள்ளன. கோயில்களின் திருவிழாக்கள் கார்த்திகை மாதமும், ஜல்லிக்கட்டு மாசி மாதமும் நடைபெறும்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் கைலாசம் கிளையின் கோயில் மாடு பங்குபெறுவது வழக்கமான ஒன்று. 2019ஆம் ஆண்டுவரை இதே நடைமுறை பின்பற்றப்பட்டுவந்தது.
2021ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான சமாதான கூட்டம் நடைபெறாமல் அப்பகுதியைச் சேர்ந்த சின்னையா, செந்தில்குமார் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்துவந்தனர்.
இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான சமாதான கூட்டம் நடத்த வேண்டுமென கிராம மக்கள் போராட்டங்கள் நடத்திய பின்பு 2021 ஜனவரி 22ஆம் தேதி சமாதான கூட்டம் நடைபெற்றது. ஆனால் கோயில் மாடுகளுக்கான மரியாதை குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் சமாதான கூட்டம் முடிந்தது.
இதனையடுத்து சின்னையா, செந்தில்குமார் சமாதான கூட்டம் நடைபெற்று கோயில் காளைகளுக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மரியாதை செய்ய வேண்டும் எனக் கூறிய 60 குடும்பங்களுக்கு கோயில் வரி வாங்காமல் அவர்கள் சாமி கும்பிடுவதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இது குறித்து சம்பந்தப்பட்ட கோயிலுள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்களிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, இடைக்கால உத்தரவாக 2019ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட முறைப்படி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உத்தரவிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான சமாதான கூட்டம் நடத்த உத்தரவிடவும் சாமி கும்பிடுவதற்கு 60 குடும்பங்களை அனுமதிக்காத சின்னையா, செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த உத்தரவிடவும் வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் பெற்று தெரிவிக்கக் கூறி வழக்கை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: காலி பணியிடங்களை நிரப்பக் கோரி வழக்கு: வனத் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு!