மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் மாதவலயம் பகுதியை சேர்ந்த சையத் அலி பாத்திமா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் மாதவலயம் கிராமத்தில் வசிக்கிறேன். எனது வீட்டின் அருகே அனுமதியின்றி மாட்டிறைச்சி கடை நடத்தப்படுகிறது. இந்த மாட்டிறைச்சி கடையால் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த மாட்டிறைச்சி கடையை வேறு இடத்திற்கு மாற்ற உரிய உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. கிராம பஞ்சாயத்து தரப்பில், "மாட்டிறைச்சி கடை வைத்திருப்பவர் ஒரு கோழி இறைச்சி கடை நடத்துவதற்கு மட்டுமே உரிமம் பெற்று உள்ளார். ஆனால் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கடை நடத்துகிறார்" என வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல், எந்த ஒரு நபரும், எந்த இடத்திலும் கால்நடைகள், செம்மறி, ஆடு, பன்றி, ஆகியவற்றை வெட்ட அனுமதிக்கக்கூடாது. கோவில் திருவிழாக்களை தவிர்த்து, கிராமப் பஞ்சாயத்து வழங்கும் பொது இறைச்சிக் கூடம் தவிர வேறு இடங்களில் கால்நடைகளை வெட்டுவது குற்றம்.
மேலும், இந்த வழக்கில் உள்ளாட்சி அமைப்பின் உரிய உரிமம் பெறாமல், மாட்டிறைச்சி கடை நடத்தி வருவதாக உள்ளாட்சி தரப்பு வழக்கறிஞர் கூறி உள்ளார். எனவே , உரிமம் பெறாமல் மாட்டிறைச்சி கடை நடத்துவது குறித்து, தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் 3 வாரங்களுக்கு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு முன் பணியில் சேர்ந்த காவலர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - உயர் நீதிமன்றம் உத்தரவு